Published : 02 Jul 2021 04:59 PM
Last Updated : 02 Jul 2021 04:59 PM

திஹார் சிறையில் இருந்து விடுதலையானார் சவுதாலா: மலர் தூவி தொண்டர்கள் வரவேற்பு

ஓம் பிரகாஷ் சவுதாலா

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி திஹார் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.

முன்னாள் துணை பிரதமரான தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா ஹரியாணா முதல்வராக இருந்தபோது ஆசிரியர் தேர்வாணையத்தில் நடந்த பல கோடி ஊழலில் சிக்கினார். இதில் தன் மூத்த மகன் அஜய்சிங் சவுதாலாவுடன் சேர்ந்து ஒம் பிரகாஷ் சவுதாலாவும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஓம் பிரகாஷ் சவுதாலா குடும்பத்தில் எழுந்த மனக்கசப்பால், கடந்த டிசம்பர் 2018-ல் அஜய்சிங் தம் இருமகன்களை முன்னிறுத்தி, ஜேஜேபி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றார்.

பின்னர் பாஜகவுடன் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ளார். துஷ்யந்த் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா கடந்த 2013-ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்தாண்டு, மார்ச்சில் அவசர பரோலில் சவுதாலா விடுவிக்கப்பட்டார். கரோனா பரவல் காலத்தில் அது இரு முறை நீட்டிக்கப்பட்டது. அவருக்கு மேலும், மூன்று மாத தண்டனையே பாக்கி இருந்தது.

கரோனா பரவல் காரணமாக சிறைகளில் நெரிசலை குறைக்க, டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ஏழு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஐந்து மாதங்களே பாக்கி உள்ளவர்கள் விடுவிக்கப்படுவர் என அறிவித்தது.

இதனால் மூன்று மாத தண்டனையே பாக்கி இருந்ததால் திஹார் சிறையில் இருந்து ஓம் பிரகாஷ் சவுதாலா இன்று விடுதலை செய்யப்பட்டார். கார் மூலம் சொந்த ஊருக்கும் திரும்பினார். அவர் தனது சொந்த மாநிலமான ஹரியாணாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் இருந்து குருகிராம் செல்லும் சாலையில் எல்லையில், அவரது கார் மீது மலர்களை தூவி அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.பின்னர் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் ஏற்கெனவே திரண்டு இருந்த ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x