Published : 02 Jul 2021 10:30 AM
Last Updated : 02 Jul 2021 10:30 AM
இந்தியாவில் சீரம் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஐரோப்பாவில் உள்ள 9 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன.
இதன்படி, கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு இந்த 9 நாடுகளுக்கும் தடையின்றி செல்லலாம், தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள் பயணம் செய்ய க்ரீன் பாஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது.
இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் அளித்த 4 தடுப்பூசிகளைச் செலுத்திய மக்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடையின்றி பயணி்க்க முடியும். இல்லாவிட்டால்,14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்புதான் அனுமதிக்கப்படுவார்கள்.
அதில், ஃபைஸர், பயோஎன்டெக், மாடர்னா, வேக்ஸ்ஜெர்வியா(அஸ்ட்ராஜென்கா), ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் ஆகிய 4 தடுப்பூசி செலுத்தியவர்கள் அளிக்கும் சான்றிதழ் மட்டுமே ஏற்கப்படும் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
இதில் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இந்தியாவில் தயாரித்த தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும் அந்த சான்றிதழை ஏற்கமுடியாது, ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் வேக்ஸ்ஜெர்வியா தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்தி,கோவின் தளத்தின் மூலம் சான்றிதழ் பெற்ற இந்தியர்களை ஐரோப்பிய நாடுகள் தனிமைப்படுத்தினால், இந்தியாவுக்கு வரும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் அளிக்கும் தடுப்பூசி சான்றிதழை இந்தியா ஏற்காமல் அவர்களை கட்டாயத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நேற்று மட்டும் 7 ஐரோப்பிய நாடுகள் அனுமதியளி்த்தன. இதன்படி, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, க்ரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரித்தன, இதில் கூடுதலாக எஸ்டோனியா நாடும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
ஆனால், 9 நாடுகளும் தங்களின் ஆட்சிக்கு உட்பட்டுத்தான் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளன ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
இது குறித்து ஜெர்மன் நாட்டு தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கூறுகையில் “ இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்தியவர்கள் அதற்குரிய சான்றிதழ் இருந்தால் அதை முழுமையாக ஜெர்மனி அங்கீகரிக்கும். அதேசமயம், தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் இருப்பதால், அங்கிருந்து வரும் மக்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத்தடை தொடரும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT