Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM
உத்தர பிரதேச மாநிலத்தில் இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசி எனும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் கருவறையை ஒட்டியபடி முஸ்லிம்களின் கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இது, காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது.
இதை குறிப்பிட்டு கடந்த 2019 டிசம்பரில் வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன் மீது மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி அசுதோஷ் திவாரி, கடந்த ஏப்ரல் 9-ல் முக்கிய உத்தரவை வழங்கி யிருந்தார்.
மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இயக்குநர் ஜெனரலுக்கு இடப்பட்ட அந்த உத்தரவில், கியான்வாபி மசூதியானது, வேறு எந்த மதத்தினரின் புனித சின்னங்களை மாற்றி அமைத்தோ, அதன் இடி பாடுகள் உதவியினாலோ அல்லது அதை இடித்தோ அதன் மீது கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்காக அறிவியல் மற்றும் தொல்லியல் அனுபவத்துடனான ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியம் சார்பில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்படாமலே கியான்வாபி மசூதி முகலாய மன்னர் அக்பரால் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக சில வரலாற்று ஆவணங்களும் சமர்ப் பிக்கப்பட்டுள்ளன.
வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட இந்த மனுவில், ‘இந்த உத்தரவு மத்திய அரசால் 1991-ல் பிறப்பிக்கப்பட்ட மதச் சின்னங்களை பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தை மீறுவதாகும். இச்சட்டம் அயோத்தியின் வழக்கிலும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தின்படி கியான்வாபி மசூதி மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வாரணாசி நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு 9-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT