

அரசியலமைப்புச்சட்டத்தின் 10-வது அட்டவணையின் கீழ் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களைத் தகுதி நீக்கக் கோரும் மனு மீது குறித்த காலத்துக்குள் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
மே.வங்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரனாஜித் முகர்ஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அளித்த மனு மீது குறித்த காலத்துக்குள் முடிவு எடுக்க சபாநாயகருக்கான நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் ஜெபராஜ் ஆஜராகினார்.
அப்போது வழக்கறிஞர் அபிஷேக் வாதிடுகையில், “ அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின் கீழ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அளித்த மனு மீது குறிப்பி்ட்ட காலக்கெடுக்குள் முடிவு எடுக்க தேவையான நெறிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா “ கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் ஏற்கெனவே என்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளேன். அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இதேபோன்று கேள்விகளையும், வாதங்களையும் எழுப்பினார். இந்த வழக்காரத்தில் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கிறோம்.
எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தகுதி நீக்க மனு மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும்.
நாங்கள் கர்நாடக எம்எல்ஏ வழக்கில் அளித்த தீர்ப்பை நீங்கள் படித்துப்பார்த்தீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் அபிஷேக் “ இல்லை அந்த தீர்ப்பைப் படிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ முதலில் அந்தத் தீர்ப்பை படித்துவிட்டு வாருங்கள். அதுவரை இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கிறோம்”எனத் தெரிவித்தார்