Last Updated : 01 Jul, 2021 02:43 PM

 

Published : 01 Jul 2021 02:43 PM
Last Updated : 01 Jul 2021 02:43 PM

உத்தரப் பிரதேசத்தில் ஒரே மாமரத்தில் காய்த்த 121 வகையான மாம்பழங்கள்

புதுடெல்லி

உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூரில் ஒரே மரத்தில் 121 வகையான மாம்பழங்கள் காய்த்துள்ளது. இந்த அதிசய மரத்தை அம்மாநிலவாசிகள் வியந்து பார்த்து வருகின்றனர்.

முகலாயர் மன்னர்கள் ஆட்சியில் பாரசீகத்திலிருந்து பல்வேறு வகையான மரங்கள் வட மாநிலங்களுக்குக் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன. இவற்றில் பலவகையானவை மாம்பழங்கள் உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்றும் கிடைத்து வருகின்றன.

இதில் குறிப்பிட்ட சில மாம்பழ வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் உள்ள சஹரான்பூரில் ஓர் அதிசய மரம் வளர்ந்துள்ளது. இந்நகரின் இருதயப் பகுதியிலுள்ள கம்பெனி தோட்டம் எனும் இடத்தில் பல அதிசய மாமரங்கள் உள்ளன. முகலாய மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இந்தத் தோட்டத்தில் வேளாண் கல்வி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தத் தோட்டத்தில் சுமார் பத்து வருடங்களுக்கு முன் 121 வகையான மாமரக்கன்றுகள் ஒன்றாக இணைத்து நடப்பட்டிருந்தது. இதை சஹரான்பூர் உ.பி வேளாண் பயிற்சி நிலையத்தின் இணை இயக்குநரான ராஜேஷ் பிரசாத் என்பவர் செய்தார்.

ஆய்விற்காக நடப்பட்ட இந்த மரத்தை பராமரித்துக் காப்பதற்காக தனியாக ஒரு பணியாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். இந்த மரத்தில் தற்போது 121 வகையான மாம்பழங்கள் கிடைத்துள்ளன.

தசேரி, லங்கடா, சவுசா, ராம்கீலா, அமர்பாலி, சஹரான்பூர் அருண், சஹரான்பூர் வருண், எல்.ஆர்.ஸ்பெஷல், ஆலம்பூர் உள்ளிட்ட 121 வகை மாம்பழங்கள் இந்த ஒற்றை மரத்தில் உள்ளன.

எனவே, இந்த மரத்தைப் பற்றி அறிந்து அதைக் காண சஹரான்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x