Published : 01 Jul 2021 01:47 PM
Last Updated : 01 Jul 2021 01:47 PM
உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப் பரவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள், புள்ளிவிவரங்கள் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவரிம் 3-வது அலை குறித்தும், டெல்டா பிளஸ் வைரஸ் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்துப் பேசியதாவது:
டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது, அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்குப் போதுமான ஆதாரங்களும், புள்ளிவிவரங்களும் இல்லை.
ஆனால், கரோனா வைரஸ் தடுப்பு முறைகளை மக்கள் தொடர்ந்துதீவிரமாகப் பின்பற்றினால், குறிப்பாக முகக்கவசம் அணிதல், சமூகவிலகல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் அடுத்தடுத்து புதிதாக உருவாகும் உருமாற்ற வைரஸ்களிடம் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஏராளமானோர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். கடந்த ஓர் ஆண்டாக மருத்துவர்கள் கரோனாவுக்கு எதிரானப் போரில் தீவிரமாக ஈடுபட்டார்கள், அவர்களின் அர்ப்பணிப்பான பணி ஊக்குவிக்கப்பட வேண்டும், உயிர்தியாகம் செய்த மருத்துவர்களை நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்களை நினைவில் கொண்டு, மீண்டும் அதுபோன்ற சூழல் உருவாகாமல், கரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.கரோனா தடுப்பு விதிகளை ஒவ்வொருவரும் கடைபிடித்து, தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டு, மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் குறைவான பளுவை அளிக்க வேண்டும்.
அதேநேரத்தில் மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதும், வன்முறையில் ஈடுபடுவதும், அவர்களின் பணியில் சோர்வை ஏற்படுத்திவிடும்.
மருத்துவர்களின் பணியை அங்கீகரித்து, அவர்களுக்கு மரியாதைஅளிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை கண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு குலேரியா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT