Published : 01 Jul 2021 09:32 AM
Last Updated : 01 Jul 2021 09:32 AM
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசித் தயாரித்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தான் கண்டுபிடித்த ஜைகோவ்-டி(ZyCoV-D) மருந்தை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்(டிஜிசிஐ) அனுமதி கோரியுள்ளது.
டிஎன்ஐ தடுப்பூசி தயாரித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், 3-கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்துவிட்டநிலையில் இந்த அனுமதியை டிஜிசிஐ அமைப்பிடம் கோரியுள்ளது.
4 தடுப்பூசிகள்
இதுவரை இந்தியாவில் 4 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரப்பயன்பாட்டுக்கு அனுமதியளித்துள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஜைடஸ் கெடிலாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 5-வது தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெருமையும், முதல் டிஎன்ஐ வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்கு கிடைக்கும்.
3 டோஸ் கொண்டது
ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸ் செலுத்த வேண்டும். நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
ஊசியில்லா தடுப்பூசி
அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில்(hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்
இந்த தடுப்பூசி, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையின் கீழ்வரும்,உயிர்தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்கு பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. அதன்பின் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியதைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, உயிரிழப்பும் குறைந்து வருகிறது.
ஆனாலும், தடுப்பூசி செலுத்தும் வேகம் போதுமானதாக இல்லை, பற்றாகக்குறை நிலவுவதால், 3-வது அலையைத் தவிர்ப்பது கடினம் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
3-வது அலையை வராமல் தடுக்கும் நடவடிக்கையில் மத்தியஅரசு களமிறங்கி, தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே 4 மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 5-வதாக ஜைடஸ் கெடிலா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டிஎன்ஏ வகை தடுப்பூசி சிறந்த முறையில் கரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாக கிளினிக்கல் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 28ஆயிரம் பேரிடம் 3வது கிளினிக்கல் பரிசோதனையை ஜைடஸ் கெடிலா நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த புள்ளிவிவரங்களில், ஜைகோவ்-டி தடுப்பூசியின் பாதுகாப்பும், உருமாற்றம் அடைந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறனும் சிறப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் 12 முதல் 18வ யதுள்ள பிரிவினருக்கு ஜைகோவி-டி பாதுகாப்பானது என ஜைடஸ் கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பூசியை தயாரிக்க முடியும் என கெடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கக் கோரி மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் மனு அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT