Published : 30 Jun 2021 04:02 PM
Last Updated : 30 Jun 2021 04:02 PM

பிரியங்கா காந்தியுடன் சந்திப்பு; புகைப்படத்தை வெளியிட்ட சித்து

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கட்சித் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமரீந்தர் சிங், சித்து ஆகியோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்த அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்தக் குழுவிடம் பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தநிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து முறையிடப்போவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் சித்துவை தான் சந்திக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். சித்துவை சந்தித்து பேசினால் கட்சியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என ராகுல் காந்தி கருதியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சித்து டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைபடத்தையும் சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரியங்கா காந்தியுடன் நீண்டநேரம் உரையாற்றியதாகவும் சித்து குறிப்பிட்டுள்ளார். எனினும் இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் அதிகாரபூர்வ அறிவிபு்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x