Last Updated : 30 Jun, 2021 02:01 PM

3  

Published : 30 Jun 2021 02:01 PM
Last Updated : 30 Jun 2021 02:01 PM

நாட்டிலேயே மேற்கு வங்கத்தில்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறைவு: ஜே.பி.நட்டா விமர்சனம்

கொல்கத்தா

புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் கரோனா தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். எங்கெல்லாம் திரிணமூல் காங்கிரஸ் உள்ளதோ அங்கெல்லாம் வன்முறை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக மாநிலச் செயற்குழு உறுப்பினர்களைக் காணொலி மூலம் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் கரோனா தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது.

முதலில் மம்தா, கரோனா தடுப்பூசி வழிமுறைகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். பிறகு மாநில அரசுகளே சொந்தமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால், அதில் அவர் மோசமாகத் தோல்வியடைந்துவிட்டார். பிறகு பிரதமரே, மாநிலங்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி அளிக்க அனுமதி அளித்தார்.

மாநில அரசின் தோல்வியைத்தான் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வன்முறையில் மாநிலத்தில் இரண்டு இடங்களில் பாஜக அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கட்சித் தொண்டர்கள் 1,300 பேரின் சொத்துகள் அழிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் அட்டூழியங்களைச் சந்தித்தனர். இவை அனைத்தும் ஒரு பெண் முதல்வரின் ஆட்சியில் நடந்துள்ளன. பெண் முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பில்லை என்னும்போது என்ன மாதிரியான அரசாங்கம் இங்கு நடைபெற்று வருகிறது?

தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை எதுவும் நடைபெறவில்லை. அந்த மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் மாதிரியான கட்சி இல்லாததால் வன்முறை நடைபெறவில்லை. எங்கெல்லாம் திரிணமூல் காங்கிரஸ் உள்ளதோ அங்கெல்லாம் வன்முறை இருக்கும். அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயம் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கும்.

இதுவரை போலி கரோனா தடுப்பூசி குறித்து நாம் கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால், போலி கரோனா தடுப்பூசி முகாம் செயல்பட்ட ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான். ஏன் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மிமி சக்கரவர்த்தி கூட, போலி கரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டார்.

திரிணமூல் அரசும், ஊழலும் ஒன்றுதான். எங்காவது கரோனா மருந்துகளில் ஊழல் இருக்குமானால், அது மேற்கு வங்கத்தில்தான் நடைபெறும். இது வெட்கக் கேடானது''.

இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை மிமி சக்கரவர்த்தி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்ற கரோனா வைரஸ் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதில் மிமிக்கு வயிற்று வலி, ரத்த அழுத்தக் குறைவு, நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

மிமி பங்கேற்ற கரோனா தடுப்பூசி முகாம் போலியானது என்றும், அந்த மருந்தும் போலியானது என்றும் தெரியவந்தது. இதையடுத்து முகாமுக்கு ஏற்பாடு செய்து மோசடி செய்த தேபஞ்சன் தேவ் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x