Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்பக் கொள்கையின்படி சமூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தற்போதைய குறைகள் ஏற்புடையதாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சசி தரூர் முன்னிலையில் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் நேற்று ஆஜராகி கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் அதன் பொதுக்கொள்கை பிரிவின்இயக்குநர் ஷிவ்நாத் துக்ரால் மற்றும் நம்ரதா சிங் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய அரசு விவகாரம் மற்றும் பொதுக்கொள்கையை பின்பற்றும் ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிஅமன் ஜெயின், சட்டப்பிரிவு இயக்குநர் கீதாஞ்சலி துகார் ஆகியோர் குழுவின் முன்பு ஆஜராகி கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஃபேஸ்புக், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் இந்திய அரசு வகுத்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றவேண்டும் என்று நிலைக்குழுவினர் தெரிவித்தனர்.
பயனர்களின் தகவல்கள் மற்றும் தகவல் பாதுகாப்பு ஆகியன மிகவும் ரகசியமாக கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தற்போது இந்நிறுவனங்கள் செயல்படுத்தியதால் ஏற்பட்ட குறைகள் ஏற்புடையதல்ல என்று பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கை குறிப்பாக பெண் பயனர்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குழுவினரிடம் பிரதிநிதகள் விளக்கினர். தகவல் பரிமாற்றங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் தெரிவித்தனர். ஃபேஸ்புக் நிறுவனம் இடைக்கால அறிக்கையை ஜூலை 2-ம் தேதி தாக்கல் செய்வதாகவும், இறுதி அறிக்கை ஜூலை 15-ம் தேதிதாக்கல் செய்வதாகவும் அதில் பயனர்கள் அளித்த புகாருக்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை மே 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் பயனர்களின் தகவல் பாதுகாப்பு மற்றும் புகார்களை விசாரிக்க உரிய வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்திய பிரிவு அதிகாரி ஒருவரும், குறைகள் எத்தனை நாள்களில் தீர்க்கப்பட்டன என்றவிவரமும் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் புதிய விதிமுறைகளில் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT