Published : 29 Jun 2021 07:27 PM
Last Updated : 29 Jun 2021 07:27 PM

ஜம்மு ட்ரோன் தாக்குதல் எதிரொலி: உள்துறை, பாதுகாப்பு அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஜம்மு காஷ்மீரில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக பிரதமர் மோடி இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஜம்மு விமான நிலைய வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் ஞாயிறு அதிகாலையில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அன்றைய தினமே, ஜம்மு விமான நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நார்வால் பகுதியில், 5கிலோ வெடிமருந்துடன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.

இந்த வகையான வெடிபொருட்களை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே இதில் அவர்களின் கைவரிசை இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்புத் துறை எதிர்நோக்கியுள்ள சவால்களும், அதை சமாளிக்கும் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இளைஞர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்படதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x