Published : 29 Jun 2021 06:19 PM
Last Updated : 29 Jun 2021 06:19 PM
ஜூலை 9ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 13 வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்தக் கூட்டத்தொடர் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுமா என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மக்களவை உறுப்பினர் 540 பேரில் இதுவரை 403 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 232 பேரில் இதுவரை 179 பேரும் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா பாதிப்பு தொடங்கிய நாள் முதல் இதுவரை மூன்று முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், மூன்று முறையுமே மிகமிகக் குறைவான நாட்களே கூட்டத்தொடர் நடைபெற்றது.
இந்நிலையில், ஜூலை 9ல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மொத்தம் 20 நாட்கள் நடைபெறக்கூடும் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்லிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்த மாநிலங்களில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள கட்சியின் பிரதிநிதிகள் கரோனா பெருந்தொற்றை கையாளுதல், குறிப்பாக தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT