Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

நூற்றாண்டு விழா நிறைவடைந்ததை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானாவில் நரசிம்மராவ் சிலை திறப்பு: ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்பு

மறைந்த முன்னாள் பிரதமர் பிவி.நரசிம்மராவின் நூற்றாண்டு விழாவினையொட்டி, நேற்று ஹைதராபாத் நெக்லஸ் ரோட்டில் உள்ள அவரது சமாதி அருகே 26 அடி உயர வெண்கல சிலையை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஹைதராபாத்

மறைந்த முன்னாள் பிரதமர் பிவி. நரசிம்மராவின் நூற்றாண்டு விழா நிறைவடைந்ததையொட்டி, நேற்று ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் அவரது முழு உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.

மறைந்த முன்னாள் பிரதமர் பிவி. நரசிம்மராவின் நூற்றாண்டு விழா தெலங்கானாவில் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள அவரது நினைவிடம் அருகே நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நரசிம்மராவின் 26 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகையில், ‘‘நரசிம்மராவ் ஒரு பன்மொழி வித்தகர். பன்முக தீர்க்கதரிசி. நவோதயா பள்ளிகள், குருகுல பள்ளிகள் பிவி நரசிம்ம ராவ் ஆட்சியில் கொண்டு வந்ததே ஆகும். சமயத்திற்கு தகுந்ததுபோல் முடிவெடுப்பதில் பிவி நரசிம்ம ராவுக்கு நிகர் அவரே. தனக்கு சொந்தமான 800 ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்கியவர். மைனாரிட்டி அரசை அவரின் திறமையால் 5 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி புரிந்தவர்’’என்றார்.

இதில் கலந்துகொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசும்போது, பிவி நரசிம்ம ராவ், அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு அனைவராலும் கவுரவிக்க கூடிய மாமனிதர் என மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரது நூற்றாண்டு விழா உண்மையிலேயே அனை வருக்கும் ஒரு பண்டிகையாகும். அவரது சிலையை நான் திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்’’ என்றார்.

ஆந்திராவிலும் சிலை திறப்பு விழா

இதேபோன்று ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலும் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் நரசிம்ம ராவின் முழு உருவச்சிலையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். அப்போது அவர் நாட்டுக்கு செய்த பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x