Published : 28 Jun 2021 03:11 AM
Last Updated : 28 Jun 2021 03:11 AM

உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்தில் பிறந்த மண்ணைத் தொட்டு வணங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான பரவுங் கிராமத்திற்கு நேற்று சென்றார். அப்போது அவர் தான் பிறந்த சொந்த மண்ணை தொட்டு வணங்கினார். படம்: பிடிஐ

புதுடெல்லி

உ.பி.யில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிறந்த மண்ணை தொட்டு வணங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் சொந்த ஊர், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டெஹாத் மாவட்டத்தில் உள்ள பரவுங் கிராமம் ஆகும். இதனிடையே, உ.பி.யில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட அவர், தனது மனைவி சவீதா தேவியுடன் டெல்லியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு ரயிலில் புறப்பட்டார்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு பிறகு, 15 ஆண்டுகள் கழித்து ஒரு குடியரசுத் தலைவர் ரயிலில் பயணம் செய்தது இதுவே முதல்முறை ஆகும். இந்நிலையில், கான்பூர் டெஹாத் மாவட்டத்துக்கு ரயிலில் நேற்று சென்றடைந்த ராம்நாத் கோவிந்த், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பரவுங் கிராமத்துக்கு சென்றார். ஹெலிகாப்டரில் இருந்துஇறங்கியதும் உணர்ச்சிப் பெருக்கில் தனது பிறந்த மண்ணை அவர் தொட்டு வணங்கினார். இதையடுத்து, அங்கிருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எனது கிராமத்தின் மண் மணமும், இங்குள்ள மக்களும் எனது நினைவில் இருந்து கொண்டே இருப்பார்கள். என்னைப் பொருத்தவரை, பரவுங் ஒருகிராமம் கிடையாது. அது எனதுதாய் தேசம். மக்களுக்கு சேவைசெய்யும் உத்வேகத்தை இங்கிருந்துதான் நான் பெற்றேன். ஒரு சாதாரண கிராமத்தில் இருந்த ஒரு சாமானிய மனிதன், இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்பை வகிப்பேன் என கனவிலும் நான் நினைத்தது கிடையாது. இதனை நிகழ்த்திக் காட்டியது நமது ஜனநாயகம் தான். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x