Published : 18 Dec 2015 12:04 PM
Last Updated : 18 Dec 2015 12:04 PM

ஐ.எஸ். உடன் தொடர்பு- புனேவில் 16 வயது மாணவியிடம் போலீஸ் விசாரணை

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர இருந்ததாக, புனேவைச் சேர்ந்த 16 வயது மாணவியை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த மாணவியிடம் விசாரணை நடத்தி வருவதை வியாழக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு போலீஸார் உறுதி செய்தனர்.

இது குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி பானுபிரதாப் பார்கே கூறும்போது, "விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவி 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் மிகவும் கெட்டிக்காரரான இவரது நடவடிக்கையில் மீது சமீப காலமாக மாற்றம் இருந்தது. இவரது இணையதள தொடர்புகள் புலனாய்வு போலீஸாருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்ததையும் நாங்கள் ஒரு கட்டத்தில் உறுதி செய்தோம்.

மாணவியின் நடவடிக்கையை கடந்த வாரம் முதல் நாங்கள் தீவிரமாக கண்காணித்து வந்தோம். இதில் அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் வசம் இழுக்கப்பட்டது எங்களுக்கு தெரியவந்தது. மேலும் மாணவி அந்த இயக்கத்துக்கு நேரடியாக உதவி புரியவும் தயாராக இருந்தார். அடுத்து ஆண்டில் சிரியாவுக்கு பயணிக்க அவர் முயற்சி செய்தது உறுதியானதைத் தொடர்ந்து மாணவியை நாங்கள் கைது செய்தோம்" என்றார்.

சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகள் குறித்து மாணவிக்கு சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது. பின்னர் அது தொடர்பான தேடலை அவர் மேற்கொண்டபோது இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயங்கும் நபர்களுடம் மாணவிக்கு தொடர்பு கிடைத்தது. அவரது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை கண்காணித்தபோது மாணவியிடம் அவர்கள் தொடர்ந்து பேசி மூளை சலவை செய்தது பயங்கரவாத தடுப்பு போலீஸாரால் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தவிர மாணவியின் நடவடிக்கைகளிலும் அவரது பெற்றோர்கள் மாற்றத்தை கண்டுள்ளனர். ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளை விரும்பும் அந்த மாணவி திடீரென புர்கா உள்ளிட்ட உடைகளுக்கு மாறியதாகவும் விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போலீஸார் தெரிவித்தனர்.

மாணவியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியோடு அவருக்கு உளவியல் வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x