Published : 27 Jun 2021 07:05 PM
Last Updated : 27 Jun 2021 07:05 PM

முன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது : பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

முன்னாள் ராணுவ வீரர்களின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

லடாக்குக்கு 3 நாள் பயணமாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். முதல்நாளான இன்று அவர் முன்னாள் ராணுவத்தினரை சந்தித்துகலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ததில் முன்னாள் ராணுவத்தினரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். முன்னாள் ராணுவத்தினரின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஊய்வூதியம் திட்டம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு, நீண்ட கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது. முன்னாள் ராணுவத்தினரின் நலன் மற்றும் திருப்தியில், அரசின் அசைக்கமுடியாத உறுதிக்கு இது சாட்சியமாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பில் நீங்கள் எடுத்துக்கொண்ட கவனத்தைப்போல், உங்கள் நலனில் கவனம் செலுத்துவதுதான் எங்கள் நோக்கம்.

முன்னாள் ராணுவத்தினரின் மறுவாழ்வுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் உட்பட பல நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இதன் மூலம் முன்னாள் ராணுவத்தினர் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல ஆன்லைன் சேவைகள் முன்னாள் ராணுவத்தினருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தொற்று நேரத்தில் தொலைதூர மருத்துவ சேவை வழங்குவதற்காக ‘இ-செஹாத்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. முன்னாள் ராணுவத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஐவிஆர்எஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் லடாக் துணை நிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூர், ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின் லடாக், லே, கார்கில் பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.

லடாக் பயணத்தின் போது, எல்லைப்புற சாலைகள் அமைப்பு(பிஆர்ஓ) கட்டிய பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் ராஜ்நாத் சிங் தொடங்கி வைப்பார். அங்குள்ள வீரர்களை சந்தித்தும் அவர் கலந்துரையாடுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x