Published : 26 Jun 2021 12:17 PM
Last Updated : 26 Jun 2021 12:17 PM
இந்தியாவில் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “இந்தியாவில் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 45,000 மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 7 பேருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் பஞ்சாப்பில் இருவருக்கும், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகா, ஜம்மு தலா ஒருவருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட, இரண்டாம் அலைக்குக் காரணமான டெல்டா அல்லது பி.1.617.2 வைரஸ் காரணமாகவே இரண்டாம் அலையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சுமார் 90% கரோனா தொற்று டெல்டா வைரஸால் மட்டுமே ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுக்கல், ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், போலந்து, நேபாளம், சீனா, ரஷ்யா போன்ற 80 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்டா வைரஸிலிருந்து புதிய டெல்டா பிளஸ் வேற்றுரு உருவாகியுள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்ட் என்ற இரு தடுப்பூசிகளும் டெல்டா வைரஸுக்கு எதிராக சிறந்த பலனை அளித்து வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT