Published : 25 Jun 2021 03:11 AM
Last Updated : 25 Jun 2021 03:11 AM
சாலை விபத்தில் சிக்கிய இளைஞரின் நின்றுபோன இதயத்தை தனது தீவிர முயற்சியால் சிபிஆர் (இதய புத்துயிர்) முறையின்படி மீண்டும் இயங்க வைத்த தெலங்கானா காவலருக்கு பாராட்டு குவிகிறது.
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முகமது அப்துல் கான் (19) கடந்த 21-ம் தேதி சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் ஒன்று மோதியதில் தூக்கி எறியப்பட்ட அப்துல்கான் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதை தூரத்தில் இருந்து கண்காணித்த போக்குவரத்து காவலர் கலீல், ஓடிச்சென்று, அப்துல் கானின் மார்பு பகுதியின் மீது இரு கைகளையும் வைத்து அமுக்கியவாறு சிபிஆர் முறைப்படி காப்பாற்ற முயன்றார். இதனால் சில நிமிடங்களிலேயே அப்துல்கானுக்கு நின்ற இதயம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து கரீம்நகர் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தார்.
கலீலின் தீவிர முயற்சியால் தற்போது அப்துல்கான் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பைக்கை ஓட்டிய மற்றொரு நபரும் காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது இந்த வீடியோ ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வைரலாகி வருகிறது. சாலை விபத்தில் சிக்கிய இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய கலீலின் முயற்சியையும் தன்னம்பிக்கையையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
போலீஸாருக்கு சிபிஆர் பயிற்சி
இதுகுறித்து காவலர் கலீல் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தெலங்கானாவில் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அனைவருக்கும் சிபிஆர் என்கிற கார்டியோ பல்மனரி ரீசசிஸிடேஷன் (இதய புத்துயிர்) முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் போலீஸார் கண்டிப்பாக இதனை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நகர்புறங்களில் அவர்கள்தான் விபத்து நடக்கும் இடத்தில் இருப்பார்கள் என்பதால் இதை கண்டிப்பாக கற்க வேண்டும். அப்படி நான் சிபிஆர் முறையை பயின்றதால் ஒருவரின் உயிரை காப்பாற்றினேன் எனும் மனநிறைவு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
கலீலின் செயல் பாராட்டுக்குரியது. வெல்டன் கலீல் என தெலங்கானா டிஜிபிமஹேந்தர் ரெட்டி கூறியுள்ளார். கரீம்நகர் காவல் ஆணையர் கமலாசன் ரெட்டியும் கான்ஸ்டபிள் கலீலின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளார். இதேபோன்று,நெட்டிசன்கள் பலர் சமூகவலைத்தளங்களில் கலீலை பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT