Published : 24 Jun 2021 05:46 PM
Last Updated : 24 Jun 2021 05:46 PM
கோவிட் தடுப்பூசியின் விநியோகம், பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வெளிப்படையாகவே மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அறிவியல் மற்றும் தொற்றுநோயியல் ஆதாரங்கள், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளின் அடிப்படையிலேயே இந்தியாவின் தேசிய தடுப்பூசித் திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
முறையான திட்டமிடலுடன் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பொதுமக்களின் ஆற்றல் வாய்ந்த பங்கேற்புடன் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
கோவிட்-19 தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகிப்பதில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று ஒரு சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல் எந்தவிதமான அடிப்படை ஆதாரமற்றது.
கோவிட்-19 தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மையை இந்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்கிறது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.
மத்திய அரசால் விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள் பற்றிய தகவல்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பயன்பாடு, அவற்றின் வசம் எஞ்சியுள்ள தடுப்பூசிகள், வரும் நாட்களில் வழங்கப்படவுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்தத் தகவல்கள் செய்திக் குறிப்புகள் வாயிலாகவும், இதர தளங்கள் மூலமாகவும் வெளியிடப்படுகின்றன.
கோவிட்-19 தடுப்பூசியின் விநியோகம் கீழ்க்காணும் அளவுருக்களில் மேற்கொள்ளப்படுகிறது:
1. மாநிலத்தின் மக்கள் தொகை
2. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது நோயின் தீவிரம்
3. மாநிலத்தின் பயன்பாட்டு முறை
தடுப்பூசியின் விரயம், ஒதுக்கீட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT