Published : 24 Jun 2021 03:39 PM
Last Updated : 24 Jun 2021 03:39 PM
கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் பெங்களூருவிலும் தலா ஒருவருக்கு கரோனா டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடர்ந்து, இந்த வகையான வைரஸ் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் கண்டறியப்பட்டது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.
இந்த வைரஸ் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் பெங்களூருவிலும் தலா ஒருவருக்கு கரோனா டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா மாநில கல்வி அமைச்சர் கே.சுதாகர் கூறும்போது, உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டால் அது குறித்து தகவல் அளிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பெங்களூரு, மைசூருவில் தலா ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்துள்ளோம்.
பெங்களூருவில் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த 86 வயது நபருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரிடமிருந்து கடந்த மாதம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நிம்ஹான்ஸ் (NIMHANS) மையத்திலுள்ள ஜீனோம் சீக்வென்சிங் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று தாக்கியிருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அந்த நபர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர். இன்னும் சில மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் முடிவை எதிர்நோக்கியுள்ளோம் என்றார்.
ஜீனோம் சீக்வென்சிங் என்றால் என்ன?
மரபணு வரிசைமுறை எனப்படும் ஜீனோம் சீக்வென்சிங் மூலம் ஒரு வைரஸின் உருமாற்றங்களைக் கண்டறியலாம். இதுமாதிரியான உருமாற்றங்களைக் கண்டறிய இந்தியா முழுவதும் 28 ஆய்வகங்கள் உள்ளன. இவை ஒன்றிணைந்து இன்சாகோக் என்றழைக்கப்படுகிறது. இந்த ஆய்வகங்களில் தான் உருமாற்றங்கள் உறுதி செய்யப்பட்டு அவற்றிற்கு உயிரிப் பெயரும் சூட்டப்படுகிறது. இப்போது டெல்டா பிளஸ் வைரஸும் இங்குதான் கண்டறியப்பட்டுள்ளது.
அச்சம் வேண்டாம்..
ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என அனைத்துமே உருமாறிய கரோனா வைரஸே தவிர புதிய வைரஸ் இல்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவியல் விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து தடுப்பூசிகளுமே அனைத்து வேரியன்ட் கரோனா வைரஸ்களையும் திறம்பட எதிர்கொள்வதால் மக்கள் அச்சம் தவிர்த்து தடுப்பூசி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெல்டா பிளஸ் கரோனா பாதித்த சென்னை பெண் குணமடைந்துவிட்டார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT