Published : 23 Jun 2021 04:29 PM
Last Updated : 23 Jun 2021 04:29 PM

ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள்; நவம்பர் வரை நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் உணவு தானியத்தை அடுத்த 5 மாதங்களுக்கு மேலும் ஒதுக்கீடு செய்ய பிரதமர் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரோனா நிலவரம், நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

80 கோடி மக்கள் பயனடையும் வண்ணம் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி பண்டிகை வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை முதல் நவம்பர் 2021 வரை, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உள்ள 81.35 கோடி பயனாளிகளுக்கு (அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் உட்பட முன்னுரிமை பிரிவினர் ) மாதம் ஒன்றுக்கு குடும்பத்தில் உள்ள நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும்.

பொது விநியோக திட்டத்தின் கீழ் 81.35 கோடி தனிநபர்களுக்கு கூடுதல் உணவு தானியமாக, மாதம் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ வழங்க அனுமதித்ததன் மூலம் ஏற்படும் உணவு மானியத்தின் மதிப்பு ரூ.64,031 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முழு செலவையும், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் பங்களிப்பு இல்லாமல் மத்திய அரசே ஏற்கிறது. இந்த உணவு தானியங்களின் போக்குவரத்து மற்றும் கையாளுதல், நியாயவிலை கடைகளின் டீலர் செலவு என மத்திய அரசுக்கு ரூ.3,234,.85 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், மத்திய அரசுக்கு ஏற்படும் மொத்த செலவு ரூ. 67,266.44 கோடியாக இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கூடுதலாக வழங்கப்படும் உணவு தானியங்கள் அரிசியா அல்லது கோதுமையா என்பதை உணவு மற்றும் பொது விநியோகத்துறை முடிவு செய்யும். பருவமழை, பனிப் பொழிவு கோவிட் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை பொறுத்து பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் 3 மற்றும் 4 வது கட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்படும்/ விநியோகிப்படும் காலத்தை நீட்டிப்பது குறித்தும் உணவு மற்றும் பொது விநியோகத்துறை முடிவு செய்யும்.

கூடுதல் உணவு தானியத்தின் மொத்த அளவு 204 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும். உணவு தானியங்களின் கூடுதல் ஒதுக்கீடு, கரோனா ஏற்படுத்திய பொருளாதார இடையூறு காரணமாக ஏழைகள் சந்திக்கும் கஷ்டங்களை போக்கும். அடுத்த 5 ஆண்டுகளில், இந்த இடையூறு காரணமாக உணவு தானியம் கிடைக்காமல் எந்த ஏழை குடும்பமும் கஷ்டப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x