Published : 23 Jun 2021 04:15 PM
Last Updated : 23 Jun 2021 04:15 PM

செப்டம்பரிலிருந்து 2-17 வயது வரையிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரஞ்சித் குலேரியா தெரிவித்திருக்கிறார்.

இந்தியா இரண்டு கரோனா அலைகளை சந்தித்துவிட்டது. தற்போது, நாடு கரோனா இரண்டாவது நிலையிலிருந்து மீண்டு மெல்ல இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ஆனால், மக்கள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கவனமாகக் கடைபிடிக்காவிட்டால் 6 முதல் 8 வாரங்களில் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா எச்சரித்துள்ளார்.

இத்தகைய சூழலில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே அடுத்தடுத்த அலைகளிலிருந்து தப்பிக்கச் சிறந்த வழியாகும். மேலும், மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்றும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா, வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது.

மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் முதல்முறையாக 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் மருந்து பரிசோதிக்கப்பட்டது. இந்த நிறுவனம் 2-வது கட்ட கிளிக்கல் பரிசோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்தால் செம்படம்பர் முதல் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி கிடைக்கும்.

இதனையொட்டியே, வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். 3வது பரிசோதனை முடிந்த கையோடு கோவாக்சின் தடுப்பூசியை 2 வயது முதலான குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசின் அனுமதியும் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x