Last Updated : 23 Jun, 2021 03:28 PM

Published : 23 Jun 2021 03:28 PM
Last Updated : 23 Jun 2021 03:28 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸே காரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி

நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து 50வது நாளாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மும்பையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.63க்கு விற்கப்படுகிறது. பிற மெட்ரோ நகரங்களான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.50க்கும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.83க்கும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.83 விற்பனையாகிறது.

நாடு முழுவதும் மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "காங்கிரஸ் தனது ஆட்சியின்போது பெறப்பட்ட பல கோடி மதிப்பிலான எண்ணெய் பத்திரங்கள் மீதான கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டது. ஆகையால், தற்போது பாஜக அரசு காங்கிரஸ் ஏற்படுத்திய கடனுக்கான வட்டியுடன் முதலையும் சேர்த்தே அடைத்து வருகிறது. இதுவே இன்றைய நிலைமைக்கு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையும் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இத்தகைய சூழலில் நாம் நமக்குத் தேவையான 80% எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். அதனால் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்கிறது" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்..

ஆனால், பெட்ரோல், டீசல் விலையுயர்வை எதிர்த்து இந்த மாதத் தொடக்கத்தில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்திய காங்கிரஸ் கட்சியோ, மத்திய அரசின் தவறான கொள்கைகளாலேயே பணவீக்கம் கட்டுக்கடங்காமல் சென்று தற்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது என்று கூறுகிறது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.67க்கும், டீசல் விலை ரூ.101.4க்கும் விற்கப்படுகிறது. நாட்டிலேயே இதுதான் அதிகமான விலை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x