Last Updated : 23 Jun, 2021 02:48 PM

1  

Published : 23 Jun 2021 02:48 PM
Last Updated : 23 Jun 2021 02:48 PM

டெல்டா பிளஸ் பரவல்: ம.பி., கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

இந்தியாவில் புதிதாகப் பரவிவரும் டெல்டா பிளஸ் எனப்படும் AY.1 வகை உருமாறிய கரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.

கடந்த 2019 டிசம்பரில் உலகை அச்சுறுத்தத் தொடங்கிய கரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளில் பலவிதமாக உருமாறியுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ்களை கிரேக்க அகர வரிசை எழுத்துக்களைக் கொண்டு ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.

அந்தவகையில் இந்தியாவில் உருமாறிய டெல்டா வைரஸ் தற்போது மேலும் உருமாறி டெல்டா பிளஸ் என்று பெயர் பெற்றுள்ளது.

டெல்டா பிளஸ் அல்லது AY.1 என அழைக்கப்படும் இந்த வகை உருமாறிய வைரஸ், எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்கக்கூடியது, தொற்று பாதித்தவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு எதிராக செயல்படுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயல்படும் தன்மைகளைக் கொண்டது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் AY.1 வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரள மாநில தலைமைச் செயலர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், இந்த மூன்று மாநிலங்களிலும் மக்கள் கூடுகைகளைத் தடுக்க வேண்டும், கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், தொற்று பரவலைக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தின் போபால், சிவபுரி மாவட்டங்கள், மகாராஷ்டிராவின் ரத்னகிரி, ஜல்காவோன் மாவட்டங்கள், கேரளாவின் பாலக்காடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகமிகக் கடுமையாக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அதிகமாக ஓரிடத்தில் கூடாத வகையில் கண்காணிக்க வேண்டும்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் போதுமான எண்ணிக்கையிலான மாதிரிகளை இன்ஸாகாக் (INSACOG) ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலை ஏற்று, மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே டெல்டா பிளஸ் வேரியன்ட் குறித்து சுகாதாரத் துறைகள் அதிகாரிகள் திவீர கண்காணிப்பில் ஈடுபட்டு தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் எத்தனை மாதிரிகள் டெல்டா பிளஸ் வேரியன்ட் என்பதை உறுதிப்படுத்து உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இன்னும் 6 முதல் 8 வாரங்களில் அதை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா கூறியிருந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் பரவல் அச்சமூட்டுவதாக அமைந்திருக்கிறது.
கரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசி என்பதால் மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அனைவரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x