Published : 22 Jun 2021 11:14 AM
Last Updated : 22 Jun 2021 11:14 AM
யோகா இந்தியாவில் உருவானதல்ல, நேபாளத்தில் உருவானது, அந்தக் கலை உருவானபோது இந்தியா ஒரு நாடாகவே இல்லை என நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பேசினார்.
ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 7-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியாவில் மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை பல இடங்களில் யோகா பயிற்சிகள் நடைபெற்றன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி கலந்து கொண்டு பேசினார். அப்போது யோகா என்ற கலை நேபாளத்தில் உருவானது, யோகா உருவானபோது இந்தியா ஒரு நாடாகவே இல்லை என அவர் கூறினார். அவர் பேசியதாவது:
யோகா என்ற கலை இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப் பட்டபோது இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல பகுதிகளாக இருந்தது. நேபாளத்தில் தான் யோகா உருவானது.
அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார். நமது நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்க தவறிவிட்டோம்.
நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர். முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு மாற்றப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்துக் கடவுள் ராமர் நேபாளத்தில் பிறந்தவர், அவர் இந்தியர் அல்ல, நேபாளி என முன்பு சர்மா ஒலி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT