Published : 21 Jun 2021 04:10 PM
Last Updated : 21 Jun 2021 04:10 PM
கரோனா அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஜப்பான் அரசு விதித்துள்ள கெடுபிடிகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம்தேதி வரை அரங்கேறுகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியும் அங்கேயே ஆகஸ்டு 24-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், கரோனாவால் அண்மைக்காலத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் பல கெடுபிடிகளை விதித்துள்ளனர்.
இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஜப்பான் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இருந்து அன்றாடம் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். ஜப்பான் வந்தடைந்தவுடன் மூன்று நாட்களுக்கு இவர்கள் மற்ற அணி வீரர்களைத் தொடர்பு கொள்ள முடியாது.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா, செயலர் ராஜீவ் மேத்தா கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், "ஏற்கெனவே வீரர்கள் ஒலிம்பிக்ஸ் கிராமத்துக்கு 5 நாட்களுக்கு முன்னதாக வரவே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதிலும் மூன்று நாட்கள் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளத் தடை விதித்திருக்கின்றனர். போட்டிகள் தொடங்குவதற்கு முந்தைய ஐந்து நாட்கள் மிகவும் முக்கியமானது. இந்நிலையில், அவர்களுக்கு இதுபோன்ற தடைகளை விதிப்பது பயிற்சிக்கு இடையூறாக அமையும். இது நியாயமற்றது. இந்திய வீரர்கள் ஐந்தாண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை 5 நாட்கள் புறக்கணித்து ஜப்பான் அநீதி இழைக்கிறது.
மூன்று நாட்களுக்கு வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றால் அவர்கள் எங்கே தங்கவைக்கப்படுவார்கள்? எங்கு சென்று உணவு அருந்துவார்கள். ஏனென்றால், மூன்று வேளை உணவையும் ஒலிம்பிக் கிராம உணவரங்கத்தில் தான் உண்ண வேண்டும். அப்படியிருக்கும்போது, இப்படியான தடை விதிப்பது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜூலை 23ம் தேதிக்கு முன்னதாக, இந்திய வீரர்கள் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று ஒலிம்பிக் சங்கம் தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT