Published : 20 Jun 2021 04:18 PM
Last Updated : 20 Jun 2021 04:18 PM
பிஹாரில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில் இந்த ஆண்டு 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதாக சந்தேகம் எழுந்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் கரோனா 2-ம் அலை பரவத்தொடங்கியது முதல் பல வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் முழுமையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது.
இதுதொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கரோனா பரவல் அதிகமாக இருந்த ஏப்ரல் - மே மாதங்களில் மாநிலத்தில் கரோனா உயிரிழப்பு குறித்து துல்லியமாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் அவர்களுக்கும் கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து கரோனாவால் உயிரிழந்து அதிகாரப்பூர்வ தகவலில் பதிவு செய்யப்படாமல் இருந்த எண்ணிக்கை தொடர்பாக பிஹார் சுகாதார அமைச்சகம் மறுகணக்கீடு செய்தது.
அந்த மறுகணக்கீட்டில் சில ஆயிரம் உயிரிழப்புகள் மாநில சுகாதாரத்துறையின் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கணக்கில் காட்டப்படாத அந்த உயிரிழப்புகள் மறுகணக்கீட்டின் மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது. இதனால் நாடுமுழுவதும் கரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சில நாட்களில் திடீரென உயர்ந்தது.
பிஹாரில் கடந்த ஜனவரி - மே மாதம் வரை கரோனாவுக்கு 7717 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.1 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
2019-ம் ஆண்டு ஜனவரி - மே மாதங்களில் 1.3 லட்சம் பேர் இறந்ததாக பதிவுகள் தெரிவிக்கின்றன. எனவே கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த காலக்கட்டத்தில் கூடுதலாக 75 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எதனால் இறந்தனர் என்பது தெரியவில்லை.
மே மாதம் மட்டும் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணத்துக்கு வெவ்வேறு காரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் இவர்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து பிஹார் மாநில அரசு விளக்கம் எதையும் வெளியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT