Published : 20 Jun 2021 09:30 AM
Last Updated : 20 Jun 2021 09:30 AM
மேற்கு வங்க பாஜக தேர்தல் பொறுப்பாளரான விஜய் வர்கியாவைக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி கொல்கத்தாவில் பதாகைகள் வைக்கப்பட்டன. இது அக்கட்சிக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த தோல்வியின் எதிரொலியாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக வென்றது. இதன் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்றிருந்தார்.
இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவிற்கு படுதோல்வி ஏற்பட்டது. இதன் வெற்றிக்காக அம்மாநிலத்தில் பாஜக தலைமை சார்பில் முதல் தலைவராக விஜய் வர்கியா நியமிக்கப்பட்டிருந்தார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான வர்கியா இப்பொறுப்பை ஏற்ற பின்தான் திரிணமூல் காங்கிரஸிலிருந்து தலைவர்கள் பாஜகவிற்கு தாவத் தொடங்கினர். தற்போது தோல்விக்குப் பின் முதல் முக்கியத் தலைவரான முகுல் ராய், மீண்டும் திரிணமூலில் இணைந்தார்.
இவரைத் தொடர்ந்து பலரும் திரிணமூல் காங்கிரஸில் இணையத் தயாராகி வருவதாகக் கருதப்படுகிறது. இதனால், வர்கியா மீது மேற்கு வங்க பாஜகவின் ஒரு பகுதியினர் இடையே எதிர்ப்பு கிளம்புகிறது.
இதை உணர்த்தும் வகையில் ’கோ பேக் (திரும்பிச் செல்)’ என எழுதி வர்கியாவுடனான பெரிய அளவு பதாகைகள் கொல்கத்தாவின் பல இடங்களில் நேற்று வைக்கப்பட்டன. அதில், திரிணமூலில் இணைந்துவிட்ட முகுல் ராயை வர்கியா கட்டி அணைக்கும் படமும் இடம் பெற்றிருந்தது.
இவை, விமான நிலையம், பாஜகவின் 2 முக்கிய அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக, கொல்கத்தாவில் பெரும் பரபரப்பு கிளம்பியது.
பிறகு தலைமை உத்தரவின் பேரில் அவை அடுத்த சில மணி நேரங்களில் அகற்றப்பட்டு விட்டன. எனினும், அதற்கு முன்பாக அதன் படம் மற்றும் வீடியோ பதிவுகளாகி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிவிட்டது.
இதுகுறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவரான திலிப் கோஷ் கூறும்போது, ‘எங்கள் கட்சிப் பெயரை கெடுக்க திரிணமூல் காங்கிரஸினர் செய்த வேலை இது.
தேர்தலுக்குப் பிறகு மாநில பாஜகவினர் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்த போஸ்டரைக் கட்சி சார்பில் எவரும் வைக்கவில்லை’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மேற்கு வங்க மாநில பாஜகவின் சில குழுக்கள் சார்பில், கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், விஜய் வர்கியா மற்றும் அவரது துணை பொறுப்பாளரான அர்விந்த் மேனன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜகவின் டெல்லி தலைமை சில நாட்களுக்கு மேற்கு வங்க மாநில செல்வதைத் தவிர்க்கும்படி வர்கியாவிற்கு அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், வரும் ஜூன் 29இல் மாநில பாஜகவின் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில், தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா காணொலி வாயிலாகக் கலந்துகொள்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தலைமை செய்து வருகிறது. தேர்தல் தோல்விக்குப் பின் முதன்முறையாக நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT