Published : 19 Jun 2021 05:18 AM
Last Updated : 19 Jun 2021 05:18 AM

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்வு

புதுடெல்லி

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு ரூ. 20,706 கோடி அதிகரித் துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 2019-ம் ஆண்டில் ரூ.6,625 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டில் ரூ.20,706 கோடியாக அதிகரித்துள்ளது. இத்தகவலை ஸ்விட்சர்லாந்தில் உள்ள தேசிய வங்கி (எஸ்என்பி) தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவாக நிதி அளவு அதிகரித்துள்ளது என வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சேமிப்பு மூலம் திரட்டப்பட்ட தொகை ரூ.4,000 கோடி. பிற வங்கிகளில் ரூ.3,100 கோடி போடப்பட்டுள்ளது. அறக்கட்டளை அல்லது நம்பகமானவர்கள் மூலமாக போடப்பட்ட நிதி ரூ.16.50 கோடியாகும். பத்திரங் கள், கடன் பத்திரங்கள் ஆகிய வற்றில் ரூ.13,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து தேசிய வங்கிக்கு பிற வங்கிகள் அனுப்பிய தகவலில் இந்தியர்கள் கருப்புப் பணமாக முதலீடு செய்த தொகை எவ்வளவு என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட அறிக்கையில், சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்க வேண்டிய பொறுப்பு தொகையின் அளவு என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தனி நபர் மூலம் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் திரட்டிய சேமிப்பு இது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியர்கள் மேற்கொள்ளும் முதலீடுகளை தாங்கள் கருப்புப் பணமாகக் கருதவில்லை என தொடக்கத்தில் இருந்தே சுவிஸ் அரசு தெரிவித்து வருகிறது. இருப்பினும் இந்தியா மேற்கொள்ளும் வரி ஏய்ப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டிலிருந்து இந்தியா - சுவிஸ் இடையே தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இதன்படி சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் விவரங்களை 2019-ம் ஆண்டு செப்டம்பரில் அளித்தது. இதைப்போல ஆண்டுதோறும் விவரங்களை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இங்கி லாந்து முதலிடத்திலும், இரண்டா மிடத்தில் அமெரிக்காவும் உள்ளது. சுவிஸ் வங்கியில் பணம் போட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 51-வது இடத்தில் உள்ளது. இந்தியாவை விட நியூஸிலாந்து, நார்வே, சுவீடன், டென்மார்க், ஹங்கேரி, மொரீஷியஸ், பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
பிரிக்ஸ் நாடுகளில் சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாகத்தான் இந்தியா உள்ளது. இந்தியாவை விட அதிக முதலீடு செய்துள்ள நபர்களை கொண்ட நாடுகளில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஆஸ்திரேலியா, இத்தாலி, சவூதி அரேபியா, இஸ்ரேல், அயர்லாந்து, துருக்கி, மெக்ஸிகோ, ஆஸ்திரியா,கிரீஸ், கனடா,கத்தார், பெல்ஜியம், பெர்முடா,குவைத்,தென் கொரியா, போர்ச்சுக்கல், ஜோர்டான், தாய்லாந்து, செஷல்ஸ், ஆர்ஜென்டீனா, இந்தோனேசியா, மலேசியா, ஜிப்ரால்டர் ஆகிய நாடுகள் உள்ளன.
தற்போது இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளிலிருந்து முதலீடு செய்வோரது அளவு குறைந்து வருவதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்ட முதலீடு கடந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் மொத்தம் 243 வங்கிகள் உள்ளன.

கரோனா வைரஸ் தாக்கத்தின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பலரது வாழ்வாதாரத்தை முடக்கி வரும் நிலையில், வெளிநாடுகளில் பணத்தை பதுக்கும் இந்தியர்களின் நட வடிக்கை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x