Last Updated : 18 Jun, 2021 06:06 PM

1  

Published : 18 Jun 2021 06:06 PM
Last Updated : 18 Jun 2021 06:06 PM

கோவாக்சினுக்கு விரைவில் அனுமதி?- உலக சுகாதார நிறுவனத்துடன் பாரத் பயோடெக் முக்கியக் கூட்டம்

பாரத் பயோடெக் நிறுவனத்தினர் உலக சுகாதார நிறுவனக் குழுவை ஜூன் 23-ம் தேதி அன்று சந்திக்க உள்ள நிலையில், கரோனா சிகிச்சைக்காக அவசர காலப் பயன்பாட்டுக்கு கோவாக்சினுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் இந்தியாவில் வழங்கப்படுகிறது. அதற்கும் அந்நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர காலத்துக்குப் பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் இந்தியத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியைச் சேர்க்க, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் கேட்டவற்றில் 90 சதவீத ஆவணங்கள் மற்றும் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் அளித்துவிட்டது. இன்னும் 10 சதவீத ஆவணங்களை அளித்த பிறகு உலக சுகாதார நிறுவனம் அவற்றை ஆய்வு செய்து தனது பட்டியலில் சேர்க்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தினர் உலக சுகாதார நிறுவனக் குழுவை ஜூன் 23-ம் தேதி சந்திக்க உள்ளனர். இந்த முக்கியக் கூட்டத்தில் தடுப்பூசி குறித்த விரிவான ஆய்வு நடத்தப்படாது என்றபோதும், தடுப்பூசியின் ஒட்டுமொத்தத் தரம் குறித்த விவரத்தை பாரத் பயோடெக் நிறுவனம் அளிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜூலை - செப்டம்பர் வாக்கில் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது. கோவாக்சின் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டால், இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணி இன்னும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x