Published : 18 Jun 2021 04:35 PM
Last Updated : 18 Jun 2021 04:35 PM
பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் தென்பட்டது. இதையடுத்து, இந்திய எல்லையோர பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலால் அவ்விமானம் திரும்பிச் சென்றது.
பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தேரா பாபா நானக் பகுதி உள்ளது. அங்கே இன்று அதிகாலை 4.30 மணியளவில், பாகிஸ்தான் ஆளில்லா விமானம் பறந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய எல்லையோர பாதுகாப்புப் படை அதன் மீது தாக்குதல் நடத்தியது.
இதை எதிர்பார்க்காத பாகிஸ்தான் ஆளில்லா விமானம், உடனடியாகத் தனது எல்லைக்குத் திரும்பிச் சென்றது. அதைத் தொடர்ந்து இந்திய எல்லையோர பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
முன்னதாக, கடந்த மே மாதம் 14-ம் தேதி அன்று, ஜம்மு மாநிலத்தின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் பறந்தது. அப்போது விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏகே 47 துப்பாக்கி, 9 மி.மீ. பிஸ்டல் உள்ளிட்ட சில பொருட்கள் அந்தப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.
அதேபோல ஏப்ரல் 24-ம் தேதி ஜம்மு மாவட்டத்தின் அர்னியா பகுதியில் பாகிஸ்தானியப் பகுதியில் இருந்து வந்த இரண்டு ஆளில்லா விமானங்களை இந்திய எல்லையோர பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்தியப் படை விழிப்புடன் இருப்பதாலும், இந்தியப் பகுதியில் அனுமதி இல்லாமல் ஆளில்லா விமானங்கள் பறந்ததாலும் அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக எல்லையோர பாதுகாப்புப் படை விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT