Published : 08 Dec 2015 09:25 AM
Last Updated : 08 Dec 2015 09:25 AM
ஆந்திர மாநிலத்தில் நேற்று கலப்பட மது குடித்த 7 கூலி தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடாவில் கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ‘ஸ்வர்ணா ஒயின்ஸ்’ கடையில் நேற்று காலை ஒரு குறிப்பிட்ட மது வகையை குடித்த 23 பேர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இதில் 3 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
மற்றவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் முலம் விஜயவாடா அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 16 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் பாபுவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
மேலும் மாநில கலால்துறை அமைச்சர் கே. ரவீந்திரா, எம்.எல்.ஏ. ராம்மோகன், விஜயவாடா போலீஸ் ஆணையர் கவுதம் சவாங், கலால் துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக மதுபான கடையின் உரிமையாளர்கள், ஊழியர்கள் என மொத்தம் 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மதுபான கடையின் முன்பு ஆர்பாட்டம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT