Published : 16 Jun 2021 12:30 PM
Last Updated : 16 Jun 2021 12:30 PM
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவில் ஒரு லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்ததாக கணக்கு காட்டப்பட்டு முறைகேடு நடந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை ஆற்றில் அண்மையில் கும்பமேளா நடந்தது. ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை நடந்த இந்த திருவிழாவில் கரோனா பரவலுக்கு மத்தியிலும் சுமார் 70 லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
தொடக்கத்தில் கரோனா பரிசோதனையில் தொய்வு இருந்த நிலையில் உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் தினமும் 50 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
இதனையடுத்து 24 தனியார் ஆய்வகங்கள் பணியமர்த்தப்பட்டன. இவற்றில் 14 ஆய்வகங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் 10 ஆய்வகங்கள் கும்பமேளா நிர்வாகம் சார்பிலும் நியமிக்கப்பட்டன.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து இதுகுறித்து விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்தது.
இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு இல்லை என போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள விவரம் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
50 பேருக்கு மேற்பட்டோருக்கு ஒரே ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தியுள்ளனர். ஆன்டிஜென் டெஸ்ட் உபகரணம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி எண் இருக்கும் நிலையில் ஒரே உபகரணத்தின் எண் 700 மாதிரிகளை எடுக்க பயன்படுத்தப்பட்டதாக போலியாக காட்டப்பட்டுள்ளது.
ஹரித்துவாரில் கதவு எண் 5 என்ற முகவரியில் மட்டும் 530 பேர் வசிப்பதாக பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
மாதிரி எடுப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களில் 200 பேர் மாணவர்கள் மற்றும் தகவல் பதிவு ஊழியர்கள். இவர்கள் அனைவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த விவரங்கள் வெளியானதை தொடர்ந்து விரிவான விசாரணை நடத்த உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT