Last Updated : 07 Dec, 2015 10:31 AM

 

Published : 07 Dec 2015 10:31 AM
Last Updated : 07 Dec 2015 10:31 AM

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு நாள்: அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு நாளை முன்னிட்டு, அயோத்தியில் நேற்று உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்கள் இடித்தனர். அதன் நினைவு நாளை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க அயோத்தியில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அயோத்தி மற்றும் பைசாபாத் ஆகிய பகுதிகளில் வன்முறை ஏற்படாமல் தடுக்கவும் மதநல்லிணக்கம் நிலவவும் மக்கள் அமைதி காக்கவும் தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் எடுத்திருந்தனர்.

இதுகுறித்து ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறுகையில், ‘‘இஸ்லாமிய மதத்தையும் அவர்களுடைய பக்தியையும் நாங்கள் மதிக்கிறோம். அதேவேளையில் ராம் மந்திர் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. பாபர் இப்போது இல்லை. அப்படி இருக்கும் போது, அந்த கட்டிடம் அங்கு எதற்கு? கடவுள் அருளால் அங்கு ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்’’ என்றார்.

இதற்கிடையில், முட்டாய் பாபர் மசூதியை சேர்ந்த முகமது ஹஸீம் அன்சாரி கூறுகையில், ‘‘பாபர் மசூதி விஷயத்தை இந்து மகாசபா அரசியலாக்கி வருகிறது. பாபர் மசூதி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்துக்கு வெளியில் எந்த நாடகமும் வைத்து கொள்ளக் கூடாது. பாபர் மசூதிக்காக அமைதியான முறையில் நீதிமன்றத்தில் போராடுவோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x