Published : 15 Jun 2021 10:40 AM
Last Updated : 15 Jun 2021 10:40 AM
பிஹாரில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக போர் குரல் எழுப்பி வரும் எம்.பி.க்கள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு காலமானார். அவரது மகன் சிராக் பாஸ்வான் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதே கட்சியின் தலைவராக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்.
பிஹாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) தனித்துப் போட்டியிட்டது. ஆனால் அங்கு பாஜக – ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.
எனினும் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். பிரதமர் மோடியுடன் நல்லுறவை பேணி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்பட உள்ளது; இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த மத்திய அமைச்சர் பதவி சிராக் பாஸ்வானுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் லோக் ஜன சக்தி கட்சி எம்.பி.க்கள் 5 பேர் சிராக் பாஸ்வானுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். சிராக் பாஸ்வானின் சித்தப்பாவும் எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் தலைமையில் அவர்கள் அணி திரண்டுள்ளனர். மொத்ததமுள்ள 6 எம்.பி.க்களில் 5 பேர் சிராக் பாஸ்வான் தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகுின்றனர்.
அவர்கள் 5 பேரும் அண்மையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து பேசினர். பசுபதி குமார் பராஸை சமாதானம் செய்யும் சிராக் பாஸ்வானின் முயற்சி பலனளிக்கவில்லை. இந்தநிலையில் அவர்கள் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் லோக் ஜனசக்தி கட்சியின் செயற்குழுவைக் கூட்ட அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். செயற்குழுவில் சிராக் பாஸ்வானை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கவும், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்கவும் 5 எம்.பி.க்களும் சேர்ந்து முயன்று வருவதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT