Last Updated : 15 Jun, 2021 03:12 AM

8  

Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM

ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட நிலம்; அடுத்த சில நிமிடங்களில் ரூ.18.5 கோடிக்கு விற்பனை: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை மீது ஊழல் புகார்

புதுடெல்லி

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அறக்கட்டளை மீது ஊழல் புகார் கிளம்பியுள்ளது. இதன் சார்பில் ரூ.18.5 கோடியில் வாங்க ஒப்பந்தமிடப்பட்ட நிலம், சில நிமிடங்களுக்கு முன் வெறும் ரூ.2 கோடியில் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த புகாரை உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் முன்னாள் அமைச்சர் பவண் பாண்டே அயோத்தியில் எழுப்பியுள்ளார். இவரது புகாரின்படி, அயோத்தியின் பிஜேஷ்வர் தோப்பில் 12,080 கெஜம் அளவிலான நிலம், பாபா ஹரிதாஸ் என்பவருக்கு சொந்தமானது. இந்த நிலத்தை அவர், கடந்த மார்ச் 18-ம் தேதி உள்ளூரின் சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி ஆகிய இருவருக்கும் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனையை பற்றி ராமர் கோயில் தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினரான டாக்டர் அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தியின் மேயர் ரிஷிகேஷ் உபாத்யா ஆகியோருக்கு தெரிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அதே நிலத்தை சுல்தான் மற்றும் மோகன் திவாரி இணைந்து ராமர்கோயில் அறக்கட்டளைக்கு ரூ.18.5கோடிக்கு விற்றுள்ளனர். இதற்கான தொகை சுல்தான் மற்றும்மோகன் திவாரியின் வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலபேரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சமாஜ்வாதி கோரியுள்ளது. இதே புகாரை ஆம் ஆத்மி கட்சியினரும் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யானசஞ்சய் சிங் கூறும்போது, "வெறும்5 நிமிட இடைவெளியில் இந்தஊழல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலத்தின் இரண்டு விற்பனைக்கான பத்திரங்களும் ஒரே தேதியில் வாங்கப்பட்டுள்ளன. பல லட்சம் ராம பக்தர்கள் நம்பி அளித்த நன்கொடையில் நடந்த ஊழல் குறித்த விசாரணையை சிபிஐயிடம் அளிக்க பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காகப் பிரச்சினைக்குரிய நிலம் அன்றி அதை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் நிலங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றின் மீது எழுந்துள்ள புகார் குறித்து ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராய்கூறும்போது, ‘‘கோயில் பணி தொடங்கிய பின் உ.பி. அரசுஅயோத்தியில் பல இடங்களில் நிலங்களை விலைக்கு வாங்குகிறது. இதை வாங்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணங்களால் இங்கு நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள முக்கிய நிலத்தின் மீதானபுகாரை விசாரிப்போம். பொதுமக்களை திசைதிருப்பவும் அரசியல் உள்நோக்கத்துடனும் இந்த புகார் எழுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

இதுகுறித்து பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹாதனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘ராமரையும் விட்டு வைக்காதவர்கள் மீதம் வைத்திருப்பது என்ன? மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் பொய் எனத்தெரிந்தால் புகார் எழுப்பியவர்களிடம் ரூ.50 கோடி இழப்பீடு வசூலிக்க வேண்டும் என பல்வேறு மடங்களின் தலைவர்கள் கூறி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x