Published : 14 Jun 2021 03:11 AM
Last Updated : 14 Jun 2021 03:11 AM

பிரதமரின் முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தில் 21 சதவீத மக்களுக்கு பலன்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தகவல்

புதுடெல்லி

பிரதமரின் கனவுத் திட்டமான முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 21 சதவீத மக்கள் பலன் அடைந்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

நாட்டின் செயல்திறன் மிக்க மாவட்டங்களை தேர்வு செய்துஅவற்றின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி முன்னோடி மாவட்டங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் மக்களின்வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்மாற்றங்களைக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவத்துக்கு ஏற்ப திட்டங்களை வகுக்கும் இத்திட்டத்தை ஐநா அமைப்பின் மேம்பாட்டு திட்டப் பிரிவு ஆய்வு செய்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இத்திட்டத்தினால் இந்திய மக்கள் தொகையில் 21 சதவீதத்தினரின் வாழ்க்கையில் வளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் பாராட்டியுள்ளது. இந்த திட்டம் நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் வினையூக்கியாக இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் இந்த அறிக்கை குறித்து நிதி ஆயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய இத்திட்டம் குறித்து ஐ.நா. சுதந்திரமான ஆய்வை மேற்கொண்டு அறிக்கைவெளியிட்டுள்ளது. அதன் அறிக்கைமுடிவுகளைப் பார்க்கும்போது இத்திட்டத்தில் பங்காற்றியது குறித்து பெரும் மன திருப்தி ஏற்படுகிறது.

இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இத்திட்டம் மிக நீண்ட பயணமாகும். இத்திட்டத்தின் இலக்கு குறித்தும், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் தெளிவான தொலைநோக்கு பார்வை பிரதமருக்கு இருந்தது.

இத்திட்டம் குறித்த ஆரம்பக்கட்ட ஆலோசனைகளின்போது முன்னோடி மாவட்டங்களின் ஆதாரங்களில் கவனம் செலுத்துவதைவிடவும் முக்கியம், மாவட்ட நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது என்றுபிரதமர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் செயல்பாடுகளை, கட்டமைப்பை உருவாக்க சில மாதங்கள் தேவைப்பட்டன.

தற்போது இத்திட்டம் நாட்டின் வேர்களில் மாற்றங்களைச் சாத்தியப்படுத்தியுள்ளது. இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பல பின்தங்கிய மாவட்டங்களிலும் முன்னேற்றத்தை உண்டாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x