Published : 12 Jun 2021 05:21 PM
Last Updated : 12 Jun 2021 05:21 PM
கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கபப்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில், கரோனா தடுப்பு மருந்துகளுக்கு 12% லிருந்து குறைக்கப்பட்டு 5% மாக ஜிஎஸ்டி தொடரும் எனத் தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 43 ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மருத்துவ உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என மாநில அரசுகள் கூறி இருந்தன.
இந்நிலையில், அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அந்த குழு ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை காணொலி காட்சி மூலம் கூடிய 44வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,
1) நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படுத்தப்படும் "டொசிலிசுமாப்" மருந்துக்கு 5% ஜி.எஸ்.டி வரி வசூல் செய்த நிலையில் தற்போது அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
2) கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
3) கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்துக்கான ஜி.எஸ்.டி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
4) மத்திய சுகாதார அமைச்சகத்தால் கரோனாவுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி 5% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
5) மருத்துவ ஆக்சிஜனுக்கு 12% ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
6) ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க், பிபாப் மெஷின் உள்ளிட்டவற்றிக்கான ஜி.எஸ்.டி.வரி 12%-ல் இருந்து 5% ஆக குறிக்கப்பட்டுள்ளது.
7) கரோனா பரிசோதனை கருவிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
8) பல்ஸ் ஆக்சிமீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி என்பது 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
9) சானிடைசர்கள் , உடல்வெப்ப பரிசோதனை கருவிகளுக்கான 18% ஜி.எஸ்.டி வரி என்பது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
10) தகன எரிவாயு , மின்சார தகனம் உள்ளிட்டவற்றிக்கு 18% ஜி.எஸ்.டி வரியில் இருந்து 5% ஆக குறியக்கப்பட்டுள்ளது.
11) ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 28%-ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த 43வது ஜி.எஸ்.டி கூட்டத்தின் போது முழுமையாக ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு என்பது வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT