Published : 12 Jun 2021 01:35 PM
Last Updated : 12 Jun 2021 01:35 PM
உத்தரப்பிரதேசக் கிராமத்தில் கரோனா மாதா எனும் பெயரில் புதிய கோயில் மரத்தடியில் அமைக்கப்பட்டது. இதன்மூலம், மூடநம்பிக்கையை பரப்ப முயன்றதாக சிலையை கைப்பற்றி அமைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.யின் கிழக்குப்பகுதியிலுள்ள பிரதாப்கர் மாவட்டத்தின் ஜுஹி ஷுகுல்பூர் கிராமம். சங்கிர்பூர் காவல் நிலையப் பகுதியிலுள்ள இங்கு கரோனாவால் மூன்று பேர் பலியாகினர்.
மேலும் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், மிகவும் அஞ்சிய அக்கிராமவாசிகள் இடையே கரோனாவை கடவுளாகக் கும்பிட்டால் விலக்கு பெறலாம் என நம்பினர்.
இதற்காக நான்கு தினங்களுக்கு முன் கரோனா மாதா எனும் பெயரில் ஒரு சிறிய சிலை செய்தனர். அதை கிராமத்தின் ஒரு வேப்ப மரத்தடியில் சுவரை எழுப்பி பொருத்தி வைத்து கும்பிடத் துவங்கினர்.
இதை பற்றி கேள்விப்பட்டு அக்கம், பக்கம் உள்ள கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து வணங்கத் துவங்கினர். இந்த கரோனா மாதாவை வணங்குவதால் தமக்கு அதன் தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் எனவும் நம்பினர்.
பெண் தெய்வமாக அமைத்த சிலைக்கும் கரோனோ பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. இதை பூஜிக்க வந்தவர்களுக்கும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது
அதேசமயம், இப்புதிய கோயிலின் மூலம் பொதுமக்கள் இடையே மூடநம்பிக்கைகள் வளர்வதாகவும் புகார் கிளம்பியது.
இதை கேள்விப்பட்ட மாவட்ட நிர்வாகம் கோயிலை அகற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று இரவு கிராமத்திற்கு வந்த போலீஸார் அக்கோயிலை இடித்து சிலையை கைப்பற்றியது. சிலையுடன்
கோயிலை அமைத்ததாக ஜுஹி ஷுகுல்பூர்வாசி ஒருவரையும் கைது செய்து வழக்குகள் பதிவு செய்துள்ளது.
இவர் சட்டவிரோதமாகக் கோயிலை கட்டியதுடன், பொதுமக்கள் இடையே மூடநம்பிக்கைகளை வளர்த்ததாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நடவடிக்கையால், இதே போன்ற கோயிலை அமைக்க திட்டமிடப்பட்ட அருகிலுள்ள கிராமவாசிகள் அதை நிறுத்தி வைத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT