Published : 12 Jun 2021 10:26 AM
Last Updated : 12 Jun 2021 10:26 AM
ஜி - 7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் பங்கேற்கிறார். 3 அமர்வுகளில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் மீண்டும் சிறப்பாக உருவாக்குவது என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கரோனா சூழலில் நான்கு முன்னுரிமை விஷங்கள் குறித்த ஆலோசனை நடைபெறுகிறது.
கரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வருதல் மற்றும் எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்கு எதிரான பாதிப்பை எதிர்கொள்ளுதல் போன்றவை குறித்த அமர்வு விவாதங்கள் நடைபெறுகின்றன.
சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை வென்றெடுப்பதன் மூலம் எதிர்கால செழிப்பை ஊக்குவித்தல், காலநிலை மாற்றத்தை சமாளித்தல், பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல் ஆகியவை குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுடன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார்.
ஜி - 7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார். 3 அமர்வுகளில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.
உடல்நலம், காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்டு, தொற்றுநோய்களுக்கு மத்தியில் உலகத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான கருத்துகளை தலைவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT