Published : 11 Jun 2021 01:16 PM
Last Updated : 11 Jun 2021 01:16 PM
ஆற்றில் பிணங்கள் மிதந்து சென்றது, யோகி பிறந்த நாளுக்கு மோடி வாழ்த்து சொல்லாதது, கருத்து வேறுபாடு என சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
கரோனா தொற்றைக் கையாள்வதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அவரது சகாக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று யோகி சந்தித்தவுடன், இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு நாளுக்கு நாள் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அதிருப்தி அலை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், காங்கிரஸிலிருந்து விலகிய ஜிதின் பிரசாதா, பாஜகவில் இணைந்துள்ளார். அங்குள்ள பிராமணர்கள் மத்தியில் மிகப் பிரபலமான, செல்வாக்கான முகமாக ஜிதின் பிரசாதா இருப்பதால் அவரது வருகை யோகி ஆதரவாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத்தே அறிவிக்கப்படுவார். கட்சிக்குள் வேறு சில மாற்றங்கள் நிகழலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
யோகி ஆதித்யநாத், தாகூர் சமூகத்துக்கே அதிக ஆதரவுடன் செயல்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், ஜிதின் பிரசாதாவின் வருகை பிராமணர்களை ஆசுவாசப்படுத்தும், இது சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதாயம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் யோகியின் பிறந்த நாள் வந்தது. அப்போது பிரதமர் மோடி, நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் யோகிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகக் கூறப்பட்டது. ஆற்றில் பிணங்கள் மிதந்து சென்றது, கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அதிருப்தி என யோகியைச் சுற்றி சர்ச்சைகள் ஏற்பட்டன.
இந்நிலையில், பாஜகவின் முக்கியத் தலைவர்களைச் சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ள யோகி ஆதித்யநாத், நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதன்மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல், கட்சிக்குள் ஜிதின் பிரசாதா வருகை, சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பிரதமருடன் யோகி விவாதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை யோகி ஆதித்யநாத் சந்திக்கச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT