Last Updated : 11 Jun, 2021 10:56 AM

1  

Published : 11 Jun 2021 10:56 AM
Last Updated : 11 Jun 2021 10:56 AM

'கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்'-சிறுபான்மையினருக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்

குவாஹாட்டி

வறுமையைக் குறைக்க கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள் என்று சிறுபான்மையினருக்கு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் அசாமில் பாஜக வெற்றி பெறுவதற்கு முக்கியப் பங்காற்றியவர். 2021 அசாம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்காக ஹிமந்தா பிஸ்வா சர்மா பெரும் பணியாற்றியதை அடுத்து, அவர் முதல்வர் ஆனார்.

கடந்த மே மாதம் 10-ம் தேதி ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் முதல்வராகப் பதவியேற்றார். முதல்வராகி 30 நாட்கள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ''அனைத்து ஏழை மக்களுக்கும் அரசு பாதுகாவலராக இருக்கும். எனினும் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினைகளைச் சந்திக்கும் சிறுபான்மைச் சமூகத்தின் ஆதரவு அரசுக்குத் தேவைப்படுகிறது. ஏனெனில் மக்கள் தொகைதான் வறுமை, படிப்பறிவு இன்மை, முறையான குடும்பக் கட்டுப்பாடு இல்லாமை ஆகியவற்றுக்கு அடிப்படைக் காரணிகளாக உள்ளன.

என்னுடைய அரசு சிறுபான்மைச் சமூகப் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் பணியாற்றும். இதன்மூலம் இந்தப் பிரச்சினையை எளிதாகக் கையாள முடியும். சமூகத் தலைவர்கள் இதில் தலையிட்டுப் பொதுமக்களிடையே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசி உற்சாகப்படுத்த வேண்டும். கண்ணியமான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையைச் சிறுபான்மை சமூக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அரசுக் கோயில் மற்றும் வனங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளாது. நிலங்கள் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கோயில், வன நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்'' என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x