Published : 11 Jun 2021 09:46 AM
Last Updated : 11 Jun 2021 09:46 AM
கூண்டுப் புலியுடன் நண்பர்களாக இருக்க விரும்பவில்லை என்று கூறி மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சிவசேனாவைத் தாக்கியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலின் பிறந்த நாள் நேற்று (ஜூன் 10) புனேவில் கொண்டாடப்பட்டது. அப்போது கொத்ரூட் பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 1,300 பேருக்கு கரோனா தடுப்பூசி டோக்கன்களை பாட்டீல் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வனத்தில் பணிபுரியும் தன்னார்வலரைச் சந்தித்தேன். அவர் புலியின் படம் அடங்கிய புகைப்பட ஆல்பத்தைப் பரிசாகக் கொடுத்தார். அவருக்கு பதில் கூறும் விதமாக, 'இது அருமையான பரிசு. புலிகளுடன் நாங்கள் எப்போதுமே நண்பர்களாக இருப்போம்' என்று கூறியிருந்தேன்.
எனினும் சிவசேனாவின் சின்னம் புலி என்பதால், ஊடக நண்பர்கள் அந்தக் கருத்தை சிவசேனாவுடன் பாஜக மீண்டும் நட்பாக முயல்வதாகத் தெரிவித்துவிட்டனர். நாங்கள் எப்போழுதுமே நிறையப் பேருடன் நண்பர்களாக முயற்சி செய்வது உண்மைதான். ஆனால், நாங்கள் காட்டில் இருக்கும் புலிகளுடனே நட்பாக விரும்புவோம். கூண்டுப் புலியுடன் அல்ல.
என்னுடைய பிறந்த நாள் தினத்தில், மாநிலத்தில் பாஜகவின் நம்பர் 1 கட்சிப் பதவியைத் தக்கவைப்பேன் என்று அரசியல் உறுதி எடுக்கிறேன். வரவுள்ள மாநகராட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று வெற்றி பெற்றுக் காட்டுவோம். தைரியம் இருந்தால் பிற கட்சிகளும் கூட்டுச் சேராமல் தனியாக இருந்து தேர்தலை எதிர்கொள்ளலாம்'' என்று சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிவசேனா கட்சி, தனது கொள்கைக்கு நேர் எதிரான காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஆகிய கட்சிகளுடன் ஒன்றிணைந்து மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு அமைத்தது. இதைப் பாஜக தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT