Published : 10 Jun 2021 01:43 PM
Last Updated : 10 Jun 2021 01:43 PM
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசின் இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. எனினும் மூன்றாவது அலையில் குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
‘‘கரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும். இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை’’ எய்ம்ஸ் மருத்துவமனை அண்மையில் தெளிவுபடுத்தி இருந்தது.
இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) வெளியிட்டுள்ளது.
அதில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான புதிய கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
* 5 வயது மற்றும் அதற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை.
* 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், முகக்கவசம் அணியலாம்.
* 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளும் சரியான முறையில், பெற்றோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முகக்கவசம் அணியலாம்.
* 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தேவையானால் மட்டுமே மட்டுமே ஸ்கேன்களை எடுக்கவேண்டும். தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம்
* கோவிட் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ரெம்டெசிவிர் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற மருந்துகள் எதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்க பரிந்துரைக்கப்படவில்லை.
* 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவிரின் பயன்பாடு பாதுகாப்பானது என்பது தொடர்பாக எந்த உறுதியான ஆய்வு முடிவுகளும் இல்லை.
*கோவிட் பாதிப்பு குறைவாக இருக்கும், அறிகுறி இல்லாத குழந்தைகளுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் கொடுக்கப்படக் கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT