Published : 03 Dec 2015 11:31 AM
Last Updated : 03 Dec 2015 11:31 AM

ஆந்திர - தமிழக எல்லை மாவட்டங்களில் தொடர் மழை: போக்குவரத்து பாதிப்பு, பல ரயில்கள் ரத்து

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள சித்தூர், நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது..

நெல்லூர்-சென்னை, திருப்பதி-சென்னை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு செல்லும் பல ரயில்களை தென் மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.

தமிழக எல்லையில் சித்தூர், நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.. பிரகாசம் மாவட்டத்தில் ராள்ளபோடு அணை முழுவதும் நிரம்பி, நேற்று 5 மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால்,20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீர் சூழ்ந்தது.

நெல்லூர் மாவட்டத்தில் பலத்த மழையால் இந்நகரமே வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக சூளூர் பேட்டை வெள்ளத்தால் சூழப்பட்டு இந்த பகுதிக்கு போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. பல ஏரிகள் உடையும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் ஒரு மூதாட்டி சிக்கி உயிரிழந்தார். நேற்று அமைச்சர் காமிநேனி ஸ்ரீநிவாஸ் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

சித்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 370 ஏரிகள் உடையும் கட்டத்தில் உள்ளன 82 ஏரிகள் உடைந்ததால் பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பின. காளங்கி அணையில் இருந்து 5 மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பல கிராமங்களில் வெள்ள நீர் பாய்கிறது. திருமலையிலும் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்கள் நனைந்தபடி வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

முதல்வர் ஆலோசனை

மழை காரணமாக நேற்று திருப்பதி பயணத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார். பிரகாசம், நெல்லூர், சித்தூர் மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்து போதிய உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.

திருப்பதி-சென்னை, ஸ்ரீகாளஹஸ்தி-நெல்லூர் சாலைகளில் வெள்ளம் காரணமாக ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி-வெங்கட கிரி சாலை பாதிக்கப்பட்டதால் இந்த தடத்தில் உள்ள 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.. சத்ய வேடு பகுதியில் நேற்று ஒரே நாளில் 17 செ. மீ மழை பெய்தது.

ரயில்கள் ரத்து

மழை காரணமாக ஹைதராபாத், விஜயவாடா ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் 12 ரயில்களை தென் மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. 11 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.

ஹைதராபாத்திலிருந்து சென்னை செல்லும் 10 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. விசாகப்பட்டினத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று சென்னைக்கு உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x