Published : 08 Jun 2021 09:17 PM
Last Updated : 08 Jun 2021 09:17 PM

கரோனா அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை: எய்ம்ஸ் இயக்குநர்

"கரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது தவறான தகவலாகும். இதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை" என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரண்தீப் குலேரியா இன்று கூறினார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "இரண்டாம் அலையின்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு இணை நோய்த்தன்மை அல்லது குறைந்தளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. லேசான பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படாமலேயே குணமடைந்தனர்.

எதிர்கால அலைகளை தடுப்பதற்கு முறையான கரோனா நடத்தைமுறைகளை பின்பற்றுவது அவசியம். குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் தடுப்பூசி பெறும் வரை கரோனா தடுப்பு நெறிமுறையை நாம் பின்பற்ற வேண்டும் என்றார்.

பெருந்தொற்றின் போது ஏன் அலைகள் ஏற்படுகின்றன என விளக்கிய டாக்டர் குலேரியா, "வைரஸ் மாற்றமடையும் போது, அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகைகள் உருவாகின்றன என்றும் தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற கரோனா தடுப்பு நடத்தைமுறைகளை மக்கள் பின்பற்றாமல் போவதால் புதிய அலை உண்டாகிறது" என்று கூறினார்.

சுவாச பாதிப்பு ஏற்படுத்தும் வைரசான கரோனா அலைகளாக தாக்கும். 1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சலின் போதும், 2009-ல் பன்றி காய்ச்சலின் போதும் இது தான் நடந்தது. பல அலைகளுக்கு பிறகு பருவகால தொற்றாக இது மாறலாம் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x