Published : 08 Jun 2021 04:45 PM
Last Updated : 08 Jun 2021 04:45 PM
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களில் பதிவான கள்ளச்சாரய வழக்குகளை மறுவிசாரணை செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது அலிகரில் சமீபத்தில் கள்ளச்சாராயத்தால் 100 பேர் பலியானதன் தாக்கமாகக் கருதப்படுகிறது.
அலிகரின் அரசு மதுக்கடைகளில் சீல் வைக்கப்பட்ட புட்டிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதை அறியாமல் அருந்தியதால் அலிகரில் என்பதிற்கும் மேற்பட்டவர்கள் மே 23 இல் பலியாகினர்.
இதையடுத்து காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளுக்கு அஞ்சி, கள்ளச்சாராய மது புட்டிகள் அலிகர் கிராமத்தின் கால்வாயில் கொட்டப்பட்டன. இதையும் எடுத்து அருந்தியவர்களில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இதுபோல், கள்ளச்சாராயத்தால் இதுவரை அலிகரின் பலி 100 என உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரையும் அதன் முக்கியக் குற்றவாளியான ரிஷி சர்மா என்பவர் உள்ளிட்ட சுமார் 40 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
பாஜகவின் அலிகர் மாவட்ட நிர்வாகியான இவரது தலைமையில் கள்ளச்சாராயம் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இவருக்கு உதவியாக ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் நிர்வாகியான அணில் சவுத்ரியும் இருந்துள்ளார்.
இவர்கள் இருவருமே அவர்களது கட்சிகளை விட்டு விலக்கப்பட்ட நிலையில், அனைவரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சூழலில், முதல்வர் யோகி நேற்று ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், கடந்த 15 வருடங்களாக உ.பி.யில் நடைபெற்ற கள்ளச்சாராயம் மீதான முக்கிய வழக்குகளை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாநிலத்தின் 75 மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு ஒரு அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி.யின் காவல்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘இதன்படி, கடந்த கால வழக்குகளில் அரசியல் தலையீடு உள்ளிட்ட காரணங்களால் தப்பிவர்கள் மீண்டும் சிக்குவார்கள்.
இந்த தொழில், பல ஆண்டுகளாக தொடர்ந்து அரசியல் ஆதரவுடன் நடைபெற்றுள்ளது. அரசு மதுக்கடைகளின் புட்டிகளில் நிரப்பி விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இதில் கலக்கப்படும் சில நீரகங்கள் கரோனா பரவலால் கிடைக்காமல் போயுள்ளன. இதனால், அதன் மாறாகப் பயன்படுத்தப்பட்ட ஆபத்தான நீர்திரவத்தால் இந்த பலிகள் நிகழ்ந்து பிரச்சனை வெளியாகி உள்ளது’’ எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT