Published : 06 Jun 2021 02:09 PM
Last Updated : 06 Jun 2021 02:09 PM
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டபோதிலும் மரணம் நிகழவில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களைச் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளியிருக்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இந்த கரோனா 2-வது அலையிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் லாக்டவுனை அறிவித்துள்ளன. இந்த பாதிப்பு எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 23 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கரோனா பாதிப்பு இல்லாமல் போகுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் அண்மையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தடுப்பூசி 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா வந்த 36 நோயாளிகளும், ஒரு டோஸ் போட்டு தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் மீதம் உள்ளோர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆவார். கரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின் போது வைரஸ் பாதிப்பு அனைவருக்கும் ஒன்றாகவே இருந்தது.
காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. தடுப்பூசி போடாமல் கரோனா பாதித்தவர்களைப் போன்றே இது இருந்தது.
பாதிப்படைந்தோர் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மற்ற நோயாளிகளைப்போலவே மருத்துவமனையில் சேர்க்கும் நிலையும் ஏற்பட்டது. இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மரணம் நிகழவில்லை.
இ்வ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT