Published : 05 Jun 2021 06:21 PM
Last Updated : 05 Jun 2021 06:21 PM

கரோனா சிகிச்சைக்காக மாமனாரை முதுகில் சுமந்துசென்ற மருமகளின் மனிதநேயம்

கரோனா சிகிச்சைக்காக 75 வயது மாமனாரை முதுகில் சுமந்துசென்ற மருமகளின் மனிதநேயம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாமியார் ஒருவர் தனது மருமகளைக் கட்டி அணைத்து நோயைப் பரப்பிவிட்டது தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அசாமில் மனிதநேயம் இன்னும் மரித்துப்போய்விடவில்லை என்பதை உணர்த்தும் சம்பவம் நடந்திருக்கிறது.

அசாம் மாநிலம் ராஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவரது மனைவி நிஹாரிகா. சூரஜின் தந்தை துலேஸ்வர் தாஸும் மகனுடம் வசித்துவருகிறார்.

அண்மையில், சூரஜ் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது, துலேஸ்வர் தாஸுக்கு உடல்நிலை குன்றியுள்ளது. பரிசோதனையில் அவருக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வீட்டிலிருந்த அவருக்கு மருத்துவ சிகிச்சையின் தேவை ஏற்பட்டது. உடனடியாக எதற்காகவும் காத்திருக்காது மருமகள் நிஹாரிகா தனது மாமனாரை முதுகில் சுமந்தவாறு ராஹா மருத்துவ மையத்துக்குக் கொண்டு சென்றார்.

அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், நிஹாரிகாவுக்கும் தொற்று உறுதியானது. அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், வயது முதிர்ந்த மாமனாரை தனியேவிட முடியாது எனக் கூறி நிஹாரிகா தனக்கும் மருத்துவமனையில் இடம் கோரினார். பின்னர், மருத்துவர் சங்கீதா தர், செவிலியர் பிண்டு ஹீரா இணைந்து அவர்களை நகாவோ போகேஷ்வரி புக்கனானி சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x