Published : 05 Jun 2021 04:03 PM
Last Updated : 05 Jun 2021 04:03 PM

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாரம்பரிய சொத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அரசு

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கையாள்வது எப்படி என்பது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்களும் த்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சக செயலர் ராம் மனோகர் மிஸ்ரா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

அப்படிப்பட்ட குழந்தைகளின் குடும்பச் சொத்து விற்கப்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாவட ஆட்சியர், நீதிபதி வருவாய்த் துறையின் ஆவணங்களை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

அதேபோல், பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசு பிஎம் கேர்ஸ் நிதியின் கீழும் அறிவித்துள்ள உதவிகளை அக்குழந்தைகளின் பெற்றோர் வாங்கியுள்ள வேறு சில கடன்களுக்காக சரிகட்டப்பட்டுவிடாமல் கண்காணிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் உதவி நிச்சயமாக குழந்தைகளின் கல்வி, நலன் மற்றும் அவர்களின் பிற தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறார் நீதிச் சட்டம் 2015ன் கீழ் இவற்றை உறுதி செய்திட வேண்டும்.

பெருந்தொற்று காலத்தில் குழந்தையின் சிறந்த நலன் என்பதன் அடிப்படையில், அவர்களுக்கான நிதி ஆதாரங்களை உறுதிசெய்வதோடு அவர்களின் தனிப்பட்டத் தேவைகளுக்கு அந்த நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதையும் கவனமாக திட்டமிட வேண்டும்.

இதனை தனியாக செயல்படுத்த முடியாது. ஆகையால் குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அத்தனையும் இணைந்து கூட்டாக முயற்சித்து குழந்தைகளை அழுத்தத்திலிருந்து மீட்க வேண்டும்.

இதற்காக கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த தகவல்களை சர்வேக்கள் மூலம் தயாரித்து. முழுமையான தகவல்சுரங்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பின்னர் அனைத்துத் தகவல்களையும் மத்திய அரசின் டிராக் சைல்ட் போர்டலில் (Track Child Portal) சேர்க்க வேண்டும்.

குழந்தைகள் நல் அமைப்புகளின் எண்கள் மற்றும் சைல்டுலைன் எண் 1098 ஆகியவற்றை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும். மாநில போலீஸாருக்கு இதுதொடர்பாக போதிய அறிவுரையை வழங்க வேண்டும். இதன்மூலம், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைக் கடத்தல், சட்டவிரோதமாக தத்தெடுத்தல் போன்றவற்றைத் தடுக்கலாம்.

கரோனாவால் பெற்றோர் பாதிக்கப்படும்போது அவர்களின் குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோருக்கு நம்பகம்வாய்ந்த யாரேனையும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகள் பராமரிப்பு மையங்களை அமைப்பதையும், அவற்றின் தரத்தை உறுதி செய்வதையும் மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் அந்த மையங்களில் குழந்தைகளுக்கு கரோனா ஏற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும், மனநல ஆலோசனைகள் வழங்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் அவர்களது நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் தத்துக் கொடுப்பது என்றால், அவர்களை மத்திய அரசின் குழந்தைகள் தத்தெடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி தத்துக் கொடுக்கிறார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x